previous arrow
next arrow
Slider

அறிமுகம்

ஸ்ரீ குமரகுருபரர்

தென்பாண்டி நாட்டில் தாமிரபரணி நதியின் வடகரையில் ஸ்ரீவைகுண்டம் என்று வழங்கும் திருப்பதி ஒன்றுண்டு. அதன் வடபகுத ஸ்ரீகைலாசபுரம்  எனப்பெறும். அங்கே வழிவழித் தமிழ்ப் புலமையும். முருகப் பெருமானிடத்தில் பக்தியும் பொருந்திய சைவ வேளாளர் குடும்பத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவரது வாழ்கைத் துணைவி சிவகாமசுந்தரிமையர்  எனப்பெற்றார். இவர்களுக்கு ஓர் ஆண் மகவு அணித்திங்கள், வெள்ளிக்கிழமை திருவாதிரை நன்னாளில் (24-06-1625) பிறந்தது. அக்குழந்தைக்கு குமரகுருஓபரன் என்று பெயர் சூட்டினர்.குமரகுருபரர் இந்தாண்டு வரையில் பேச வில்லை. பெற்றோர்கள் வருந்தினார்;  குமரகுருபரரரைத் திருச்செந்தூர் அழைத்துச் சென்றனர்; ஸ்ரீ செந்திலாண்டவர் திருமுன் கிடத்தித் தாமும் வரம்கிடந்தனர். செந்நிலம் பதிவாழ் கந்தன் அருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்று ஒத்துணர்ந்த போதனாய்க் கந்தர் கலிவெண்பா என்ற பிரபந்தத்தை பாடியருளினார். பின்னர்த் தம்மூருக்கு  வந்து ஸ்ரீ கயிலாசநாதர் மீது கயிலைக் கலம்பகம் என்ற பிரபந்தம் ஒன்று இயற்றினார். (எட்டு பாடல்களே கிடைத்துள்ளன)இறைவன் திருவருளால் எல்லாக் கலை

ஞானங்களிலும் கைவரப் பெற்ற குமரகுருபரர், மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையால் வழிபடுவதற்கு விரும்பியவராய்ப் பல சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே மதுரைக்குச் சென்றார்; அங்குத் தங்கியிருந்த காலத்தில் ஸ்ரீ மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்று பிரபந்தத்தைப் பாடி, மதுரையில் அந்தநாளில் ஆண்டு வந்த திருமலை நாயக்கர் (கி.பி 1623-1659) முன்னிலையில் அரங்கேற்றினார். அந்நூலை அரங்கேற்றுங்கால் ஸ்ரீ மீனாட்சியாம்மையே குழந்தை யுருவத்தில் எழுந்தருளிவந்து. “தொக்குங் கடவுள்” என்ற பாடலைக் கூறி  விரிவுரையாற்றும் பொழுது, தம் திருக்கழித்திலிருந்து முத்து மாலையை எடுத்துக் குமரகுருபரக்கு அணிவித்து மறைந்தருளினாள். மேலும் மீனாட்சியம்மை இராட்டைமணிமாலை, மீனாட்சியம்மை  குறம் என்ற நூல்களையும் பாடியருளினார். திருமலை நாயக்கரும் வியப்பும் மகிழ்ச்சியும் எய்திக் குமரகுருபரரைப் பல்லக்கிலேற்றி வழிபாடு செய்தார். குமரகுருபரர் மதுரைக் தங்கியிருத்த காலத்தில் ஸ்ரீ சொக்கநாதப்பெருமான் மீது மதுரைக் கலம்பகம் என்னும் நூலை இயற்றினார்; பின்னர்த் திருமலை நாயக்கரது வேண்டுகோட்படி நீதிநெறி விளக்கம் என்னும் நீதி நூலை இயற்றினார்.பிறகு குமரகுருபரர்சோழநாட்டுத் திருவாரூரை அடைந்தார். அங்குத் தியாகேசர் மேல் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலைப் பாடினார்.

சிவஞானோபதேசம் பெற வேண்டும் என்ற அவா மிக்குடையவராகிய குமரகுருபரர் ஞானாசிரியர் ஒருவரை நாடினார். அற்றைஞான்று திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் நான்காவது பட்டத்தில் எழுந்தருளி அருட் செங்கோல் ஓச்சியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆவர். ஞானாசிரியரை நாடிச்சென்ற குமரகுருபரர் தருமபுரத்தை அடைந்தார்: ஸ்ரீ மாசிலாமணி தேசிகரைத் தரிசித்துத் தமது ஞானாசிரியராகக் கொண்டு, தமக்குத் துறவுநிலையருளல் வேண்டும் என்று வேண்டினார். ஸ்ரீ-ல-ஸ்ரீ மாசிலாமணி தேசிகரும், குமரகுருபரரைக் காசியாத்திரை செய்து வருக எனப் பணித்தார்கள். காசிக்குச் சென்றுவர நெடுங்கால மாகுமே என்று குமரகுருபரர் கவன்றார். ஞானாசிரியரும், சிதம்பரம் சென்று வருக என்று கட்டளை அருளினார்கள்.

சிதம்பரத்துக்குச் செல்லும் குமரகுருபரர் புள்ளிருக்கு வேளூர் எனப்பெறும் வைத்தீசுவரன் கோயிலுக்குச் சென்றார்; அங்குத்திருக்கோயில் கொண்டிருக்கும் முத்துக்குமாரசுவாமி பேரில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந் தத்தைப் பாடினார். பிறகு சிதம்பரம் சென்று நடராசப்பெருமானைத் தரிசித்து அங்குச் சின்னாள் தங்கியிருந்தார். அந்நாளில் சிதம்பர மும்மணிக் கோவை என்ற பிரபந்தத்தைக் குமரகுருபரர் இயற்றினார். யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் ஜைனச் சார்புடையனவாயிருத்தலின் சைவசமயச் சார்புடைய செய்யுட்களைத் தருதல் வேண்டும் என்று சிவநேசச் செல்வர்கள் வேண்டிக்கொண்டதற்கேற்பச் சிதம்பரச்செய்யுட்கோவை என்றபிரபந்தத்தையும் குமரகுருபரர் அருளிச் செய்தார். அங்கு சிவகாமியம்மை மீது சிவகாமியம்மை இரட்டை மணிமாலை அருளினார். பின்னர்க் குமரகுருபரர் தருமபுரத்துக்கு வந்து ஞான தேசிகர்பால் காஷாயம் பெற்றார்: ஞானதேசிகர் பேரில் பண்டார மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தையும் இயற்றினார்

பிறகு குமரகுருபரசுவாமிகள் ஞானாசிரியரிடத்தில் விடைபெற்றுக் காசிக்குச் சென்றார்: தம்முடைய கல்வியறிவினாலும், தவப் பண்பினாலும், டில்லி பாதுஷாவின் பெரு மதிப்பைப் பெற்றார்; மில்லி பாது ஷாவோடு பேசுவதற்கு அந்நாட்டு மொழி அறிய வேண்டும் ஆதலின் கலைமகளை வேண்டிச் சகலகலாவல்லி மாலை என்னும் பிரபந்தத்தை இயற்றி இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல் பெற்றார். பாதுஷாவும் இவரது விருப்பத்திற்கிணங்கி, இவர் காசியில் இருப்பதற்குரிய மடம் அமைத்துக்கொள்ளக் கேதார் கட்டத்தில் இடம் அளித்தார்.குமரகுருபர சுவாமிகளும் காசியில் மடம் நிறுவினார். (அஃது இற்றைநாளில் குமாரசுவாமிமடம் என்ற பெயரில் உள்ளது.) அத்திருமடத்தில் தங்கியிருந்த காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகம் பாடினார். இந்நூல் கிடைக்கவில்லை. காசிக்கலம்பகம், காசிவிசுவநாதர் பேரில் இயற்றினார். தம் திருமடத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்திக் கொண்டு சிவபுராணப் பிரசங்கங்களைச் செய்து வந்தார்.சிவப் பணிகள் பல ஆற்றிப் பன்னெடுநாள் அங்கு தங்கியிருந்தார் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள், விபவ ஆண்டு வைகாசிமாதம், 10ஆம் நாள், அமரபட்சம் திருதியை, செவ்வாய்க்கிழமை, மூலநட்சத்திரம், 08-05-1688 இல் காலை 7.12 க்குள் இறைவனோடு இரண்டறக் கலந்தார்

© 2020 SriKasiMutt. All rights reserved.

Made With

By :